கடந்த மாதமே கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க ஆம்னி உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர் - சிஎம்டிஏ விளக்கம்
கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து பஸ்களை இயக்கக்கூடாது என கூறியதால் போலீசாருடன், பஸ் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டது. இதர பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. மேலும், இந்த மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து கழக பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.
இதேபோல, ஜனவரி 24-ந்தேதி முதல் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில், கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை எனவும், போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசின் உத்தரவை மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தைப்பூசம், குடியரசு தினத்தையொட்டி 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் சென்னையில் இருந்து சொந்த ஊர் மற்றும் கோவில்களுக்கு செல்ல ஆம்னி பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், இன்று ஆம்னி பஸ்களை கோயம்பேட்டில் இருந்து இயக்க போக்குவரத்துக் கழகம் தரப்பில் அனுமதி வழங்காததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று மதியம் முதலே பதட்டமான சூழல் நிலவியது.
மாலை 5 மணியளில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் பயணிகளுடன் இயக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆம்னி பஸ்கள் வளாகத்தை சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது, போலீசாருடன் ஆம்னி பஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், தடுப்புகள் அமைத்து பஸ் நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இரவு 7 மணியளவில் முன்பதிவு செய்த பயணிகளை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்ல போலீசாரும், அதிகாரிகளும் அறிவுறுத்தினர். பயணிகள் ஆம்னி பஸ் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பெரும் குழப்பத்துடன் ஆம்னி பஸ் நிலையத்திற்கு வந்து சென்றனர்.
இதனையடுத்து ஆம்னி பேருந்துகளை இயக்க தடைவிதிக்கப்பட்ட நிலையில், அரசு பஸ்கள் மூலமாக கிளாம்பாக்கத்துக்கு பயணிகள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதமே கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க ஆம்னி உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டதாக சிஎம்டிஏ விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, "கிளாம்பாக்கத்தில் போதிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த இடமில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.
கடந்த மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். தற்போது கோயம்பேட்டில் இருந்துதான் பேருந்துகளை இயக்குவோம் என்று கூறுகிறார்கள். பயணிகளுக்கு அவர்கள் போதிய தகவல் அளிக்கவில்லை.
இதுதொடர்பாக 6 மாதமாக பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. பொங்கல் கழித்து கிளாம்பாக்கத்திற்கு மாறி விடுவோம் என்று ஆம்னி உரிமையாளர்கள் உறுதி அளித்திருந்தனர். அரசுக்கு எதிராக இவ்வாறு செயல்படுவது சரியல்ல. மக்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. " என்று அவர் தெரிவித்தார்.