ஆம்னி பஸ்கள் வண்டலூரில் தடுத்து நிறுத்தம்: கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி


ஆம்னி பஸ்கள் வண்டலூரில் தடுத்து நிறுத்தம்: கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 25 Jan 2024 7:54 AM IST (Updated: 25 Jan 2024 8:07 AM IST)
t-max-icont-min-icon

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் ஆம்னி பஸ்கள் தற்போது பயணிகளை கிளாம்பாக்கத்தில் இறக்கிவிட்டு செல்கின்றன.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன.

இதனிடையே, ஜனவரி 24-ந் தேதி முதல் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதற்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில், கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை எனவும், போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசின் உத்தரவை மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தைப்பூசம், குடியரசு தினத்தையொட்டி தொடர் 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் சென்னையில் இருந்து சொந்த ஊர் மற்றும் கோவில்களுக்கு செல்ல ஆம்னி பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், நேற்று ஆம்னி பஸ்களை கோயம்பேட்டில் இருந்து இயக்க போக்குவரத்து கழகம் தரப்பில் அனுமதி வழங்காததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று மதியம் முதலே பதற்றமான சூழல் நிலவியது.

இதற்கிடையே மாலை 5 மணி அளவில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் பயணிகளுடன் இயக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆம்னி பஸ்கள் வளாகத்தை சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, போலீசாருடன் ஆம்னி பஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், தடுப்புகள் அமைத்து பஸ் நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இரவு 7 மணி அளவில் முன்பதிவு செய்த பயணிகளை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்ல போலீசாரும், அதிகாரிகளும் அறிவுறுத்தினர். பயணிகள் ஆம்னி பஸ் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பெரும் குழப்பத்துடன் ஆம்னி பஸ் நிலையத்திற்கு வந்து சென்றனர்.

இதேபோல, இரவு நேரத்தில் குடும்பத்துடன் ஆம்னி பஸ் நிலையத்திற்கு வந்தவர்கள் முறையான அறிவுறுத்தலின்றி அலைக்கழிக்கப்பட்டனர். நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் அரசு பஸ்களில் ஏறிச்சென்றனர். இதற்கிடையே, ஒரு சில ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்துக்கும் எடுத்துச்செல்லப்பட்டன.

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று ஆம்னி பஸ் நிலையம் பதற்றத்துடன் காணப்பட்டது. இதேபோல, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தும் சில ஆம்னி பஸ்கள் புறப்பட்டுச் சென்றன.

இதனை தொடர்ந்து, தென் மாவட்டங்களில் இருந்து தற்போது சென்னை வரும் ஆம்னி பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வர விடாமல் வண்டலூரிலேயே தடுத்து நிறுத்தி கிளாம்பாக்கம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆம்னி பஸ்கள் தற்போது பயணிகளை கிளாம்பாக்கத்தில் இறக்கிவிட்டு செல்கின்றன.

இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறும்போது;

"பேருந்துகள் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்றால் வசதியாக இருந்திருக்கும். அரசு பஸ்கள் கோயம்பேடு செல்லாது என்பதால் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்தோம். ஆனால் தற்போது ஆம்னி பஸ்களும் கோயம்பேடு செல்லவில்லை. தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து எப்படி செல்வது என தெரியவில்லை. அதிக உடமைகளை வைத்துக்கொண்டு அரசு பஸ்களில் செல்வதில் சிரமம் உள்ளது. ஆட்டோ, வாடகை கார்களில் பயணம் செய்தால் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். " என்றனர்


Next Story