ஆம்னி பஸ் நிலையம், மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது


ஆம்னி பஸ் நிலையம், மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது
x

தஞ்சையில் புதிதாக கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு போக்குவரத்து தொடங்கியது.

தஞ்சாவூர்

ஆம்னி பஸ் நிலையம்

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி சாலையில் ஆம்னி பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதை ஒழுங்குப்படுத்தி ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பஸ் நிலையம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 41 லட்சம் மதிப்பில் ஆம்னி பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆம்னி பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி திறந்து வைத்தார். அதன் பின்னரும் சிறு, சிறு பணிகள் நடைபெற்று வந்ததால், மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இருந்தது. புதிதாக கட்டப்பட்டும் திறக்கப்படாமல் கிடக்கும் ஆம்னி பஸ் நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்த்து இருந்தனர். இந்தநிலையில் ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேற்றுமாலை பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

அபராத நடவடிக்கை

பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறும்போது, ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து தான் 25 ஆம்னி பஸ்களும் இயக்கப்படும். இனிமேல் ஆம்னி பஸ்கள் பிற இடங்களில் இருந்து இயக்கப்பட்டால் போக்குவரத்துத்துறை, போலீஸ்துறை மூலம் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறும்போது, எங்களுக்கு அலுவலகம் வேண்டும். அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களை இங்கிருந்து இயக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சேகர், புண்ணியமூர்த்தி மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story