கமுதி அருகே நகைக்காக மூதாட்டி கொலை - பக்கத்துவீட்டு மூதாட்டி கைது
கமுதி அருகே மூதாட்டியை நகைக்காக கொலை செய்த பக்கத்து வீட்டு மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெருஞ்சிப்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி காளியம்மாள்(80). மூதாட்டி காளியம்மாளின் மகள் திருமணமாகி வெளியூரில் இருந்து வருவதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இவர் கடந்த 28-ம் தேதி இரவு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து இவரது மருமகன் நேரு (52) என்பவர் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மூதாட்டி காளியம்மாள் வீட்டின் அருகில் உள்ள பக்கத்து வீட்டுக்காரர் சண்முகவேல் என்பவரின் மனைவி சந்தனம்மாள் (61) என்பவர் நகைக்காக மூதாட்டி காளியம்மாளை கொலை செய்தது தெரிய வந்தது.
வீட்டில் தனியாக இருந்த காளியம்மாளை கொலை செய்து விட்டு கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை திருடி சென்றுள்ளார்.தீவிர விசாரணையில் கண்டறிந்த கோவிலாங்குளம் போலீசார் மூதாட்டி சந்தனம்மாளை இன்று கைது செய்து அவரிடம் இருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.