திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட சவர்மாவை குப்பையில் வீசிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட சவர்மா மற்றும் சிக்கன் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பை தொட்டியில் வீசினர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் இறந்து போனார். இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் சவர்மா குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெகதீஸ்சந்திரபோஸ் தலைமையில் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சவர்மா கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சில ஓட்டல்கள் மற்றும் சவர்மா கடைகளில் திறந்தவெளியில் உணவுகள் வைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்ட அதிகாரிகள் நேரடியாக கடைகளுக்கு சென்று சுகாதாரமற்ற முறையில் இருந்த சவர்மா மற்றும் சிக்கன் பொருட்களை பறிமுதல் செய்து குப்பை தொட்டியில் வீசினர்.
பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்து வந்த 10 கிலோ சவர்மா சிக்கன் பொருட்களை அள்ளி குப்பையில் கொட்டினர். மேலும் தொடர்ந்து இதே போல் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை வைத்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும், கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.