காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு


காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
x

காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

பெரம்பலூர்

கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி லடாக் பகுதியில் ஹாட் பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த அந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையிலும் மற்றும் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்கம் நாள் போலீசார் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

அப்போது மைதானத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், மண்டல ஊர்க்காவல் படை தளபதி அரவிந்தன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story