ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு: ஓய்வு எடுக்க அறிவுரை


ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு: ஓய்வு எடுக்க அறிவுரை
x

கோப்புப்படம்

திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

நெல்லை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தென்காசி அருகே இலஞ்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். இரவில் கூட்டம் முடிந்த பின்னர் அவர் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார்.

நேற்று 2-வது நாளாக நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே கங்கணாங்குளத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள இருந்தார்.

காலை 10 மணி அளவில் கூட்டத்தில் பங்கேற்க அவர் புறப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென்று தலைசுற்றி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓட்டல் அறையில் தங்கி இருந்தார்.

இதுகுறித்து உடனடியாக தனியார் மருத்துவமனை டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர், விரைந்து வந்து ஓ.பன்னீர்செல்வத்தை பரிசோதனை செய்து ஓய்வு எடுக்க அறிவுரை கூறினார். இதனால் அவர் ஓட்டலில் தங்கியிருந்து ஓய்வு எடுத்தார்.

தென்காசியில் நடந்த கூட்டத்தை முடித்து வரும்போதே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Next Story