சட்டசபையில் முதல் வரிசையில் இருந்து 2-வது வரிசைக்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம்


சட்டசபையில் முதல் வரிசையில் இருந்து 2-வது வரிசைக்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம்
x

சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், அ.தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்தனர். சட்டசபையில் இருவருக்கும் முதல்-அமைச்சருக்கு நேர் எதிரில் அருகருகே இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து, கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டார்.

இதனால், ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையில் ஆர்.பி.உதயகுமார் அமர்த்தப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த கோரிக்கைக்காக சட்டசபையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர் வெளிநடப்பும் செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று சட்டசபையில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள்" என்று சபாநாயகர் அப்பாவுவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், இன்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை மாற்றப்பட்டு இருந்தது. அதாவது, எடப்பாடி பழனிசாமி அருகே 206 எண் கொண்ட இருக்கையில் இருந்த அவர், தற்போது முன்னாள் சபாநாயகர் ப.தனபால் இருந்த 207 எண் கொண்ட இருக்கைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதாவது, முதல் வரிசையில் இருந்து 2-வது வரிசைக்கு மாறியுள்ளார்.

இருக்கை மாற்றப்பட்ட நிலையில், இன்று அவைக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவில்லை. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.வான மனோஜ் பாண்டியனுக்கும் இருக்கை மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சட்டசபையில் அவருக்கு இருக்கை மாற்றப்பட்டுள்ளது. அதாவது, அமைச்சர் வரிசையில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


Next Story