தேர்தல் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுவார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


தேர்தல் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுவார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 10 Feb 2024 8:45 PM IST (Updated: 11 Feb 2024 7:42 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

கோவை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியில்லை என்று அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே, ராமநாதபுரத்தில் நேற்று பேட்டியளித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் நான்கரை ஆண்டுகள் தயவில்தான் நடைபெற்றது. பா.ஜ.க.வின் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தது உச்சபட்ச துரோகம். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராகி கட்சியை ஐந்தாக உடைத்திருக்கிறார். பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் பிரிந்து சென்றுவிட்டார்' என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் பேசியது தொடர்பாக தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, இன்னொரு கட்சியின் உட்கட்சி பிரச்சினை பற்றி பேசமாட்டோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 2017 முதல் 2021 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அ.தி.மு.க. எப்படி இருந்தது அது அனைத்தும் நாங்கள் (பா.ஜ.க) உள்ளே இல்லை, நான் பொறுப்பல்ல, பா.ஜ.க. பொறுப்பல்ல. இது தொடர்பாக கட்சிக்குள் இருந்து பார்த்த யாரேனும் கருத்து தெரிவித்தால் அது அவர்கள் கருத்து. பா.ஜ.க.வை பொறுத்தவரை இன்னொரு கட்சியின் பிரச்சினையில் நாங்கள் குளிர்காய விரும்பவில்லை. ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்குள் இருந்து பார்த்துள்ளார், அதனால் அந்த கருத்தை கூறுகிறார். ஆகையால் இது அவருடைய கருத்து இது தொடர்பாக அவரிடம் தான் கேட்க வேண்டும்.

பா.ஜ.கவை பொறுத்தவரை இன்னொரு கட்சி பிரச்சினையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதேநேரத்தில் பிரதமர் மோடி மீது மரியாதை வைத்துள்ளவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார். அதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் கட்ட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா நாளை சென்னை வருகிறார். அதன்பின் கூட்டணி பற்றி உங்களிடம் பேசுகிறேன்' என்றார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு அ.தி.மு.க. மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அவர் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. பா.ஜ.க.வுக்காக ஓ.பன்னீர்செல்வத்தின் குரல் உள்ளது. சுருக்கமாக கூறவேண்டுமானால் ஓ.பன்னீர்செல்வத்தின் குரல் பா.ஜ.க.வில் இருந்து வருகிறது' என்றார்.

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் சேர்ந்து பா.ஜ.க. தனி அணியாக போட்டியிடப்போவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், தனி அணியாக போட்டியிடுவது அவரவர் விருப்பம். போட்டியிடட்டும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை பொதுச்செயலாளர் கூறியதுபோல் பொறுத்திருந்து பாருங்கள் மகத்தான கூட்டணி அமையும். தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. பா.ஜ.க. இல்லாத மகத்தான கூட்டணி அமையும்' என்றார்.


Next Story