பணி நிரந்தரம் செய்யக்கோரி கண்களைக் கட்டிக்கொண்டு நர்சுகள் போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி கண்களைக் கட்டிக்கொண்டு நர்சுகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த நர்சுகள் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை கண்டித்தும், இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த நர்சுகள் சேலத்தில் ஒன்றுதிரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு எம்.ஆர்.பி. நர்சுகள் சங்கத்தின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமான நர்சுகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்:-
எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அடுத்தகட்டமாக நாங்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.