என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை
என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை அமைப்பதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் நிரந்தர பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த விவகாரத்தில் என்.எல்.சி. நிர்வாகம் முறையாக செயல்படவில்லை என தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலின்படி மொத்தம் 862 பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 28 வட மாநிலத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அளித்த பரிந்துரையின் பேரில் பட்டியலில் இடம்பெற்ற நபர்களுக்கு பணி வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.