காற்று மாசுபாட்டை தடுக்க வடசென்னை நிறுவனங்கள் ஆண்டு வருமானத்தில் நிதி ஒதுக்க வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
காற்று மாசுபாட்டை தடுக்க வடசென்னை நிறுவனங்கள் ஆண்டு வருமானத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை எண்ணூர் மற்றும் மணலி சுற்றுவட்டாரப் பகுதியில் செயல்பட்டு வரும் வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் அனல்மின் நிலையம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன், தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம், மணலி பெட்ரோகெமிக்கல் நிறுவனம், மெட்ராஸ் பெர்ட்டிலைசர்ஸ் நிறுவனம் போன்றவற்றில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மாசுபாடு ஏற்படுவதாக சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு புகார் வந்தது.
இந்த புகார் குறித்து நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் விசாரித்தனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என பரிந்துரைக்க கூட்டுக்குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதேவேளையில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புகாரை விசாரித்த தீர்ப்பாயம், 'வடசென்னையில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனங்களால் ஏற்படும் காற்று மாசுவை கட்டுப்படுத்த நிறுவனங்களை சுற்றி உள்ள பகுதிகளை பசுமையாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த பகுதிகளில் அதிகப்படியான மரங்களை நட வேண்டும். இடப்பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் நிறுவனங்களை ஒட்டி உள்ள தனியார் இடங்களையும் பசுமையாக்கலாம்.
ஒவ்வொரு நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் 1 சதவீதத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒதுக்க வேண்டும். 'மணலி சுற்றுச்சூழல் நிவாரண நிதி' என இதற்கு பெயரிட்டு தமிழக அரசின் தலைமை செயலாளர், வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆகியோர் மூலம் இந்த நிதியை கையாண்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம்' என உத்தரவிட்டது.