125 ஆடுகளை பலியிட்டு கறி விருந்து: ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட வினோத திருவிழா


125 ஆடுகளை பலியிட்டு கறி விருந்து: ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட வினோத திருவிழா
x

கறி விருந்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெருமாள்கோவில்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் வைப்பார்கள். தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் கருப்பசாமிக்கு கருப்பு ஆடுகள் மட்டுமே வழங்குவார்கள்.

அந்த வகையில் கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று காலை தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமிக்கு 125 ஆடுகள் பலியிடபட்டு 2 ஆயிரத்து 500 கிலோ அரிசியில் அன்னதான உணவு சமைக்கப்பட்டது. சமைக்கப்பட்ட உணவு, இறைச்சி சாமிக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

இந்த கறி விருந்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். இந்த விருந்தானது வாழை இலையில் சாதமும் ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவார்கள்.

இந்த கறிவிருந்தில் பெருமாள்கோவில்பட்டி, திருமங்கலம், சொரிக்கம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story