அரசின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய போராட்டங்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது- சிவ்தாஸ் மீனா எச்சரிக்கை
அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சென்னை,
தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் பெறாத சங்கத்தினர், நாளை (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முன்மொழிந்துள்ளனர். தமிழக அரசின் விதிப்படி, அரசின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய எந்தவித வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது அல்லது ஈடுபடப்போவதாக பயமுறுத்தக்கூடாது.
அது, அரசு விதிகளை மீறியதாக அமைந்துவிடும். எனவே, இதுபோன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்கள் கீழ் உள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 15-ந்தேதி அன்று அரசு ஊழியர்கள் யாராவது அலுவலகத்திற்கு வரவில்லை என்றாலோ அல்லது இந்த சங்கத்தினர் நிர்ணயிக்கும் வேறு தேதியில் வரவில்லை என்றாலோ அவர்கள் பணிக்கு வரவில்லை என்று கருத வேண்டும். எனவே அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். இந்த போராட்டம் நடைபெறும் 15-ந்தேதி மருத்துவ விடுப்பு தவிர மற்ற விடுப்புக்கள் அளிக்கக்கூடாது. எனவே அன்றைய தினம் காலை 10.15 மணிக்குள் உங்கள் துறையில் உள்ள பணியாளர்களின் வருகை பற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.