'கள்ளக்குறிச்சி விவகாரத்தை யாரும் கடந்து போக முடியாது' - செல்வப்பெருந்தகை


கள்ளக்குறிச்சி விவகாரத்தை யாரும் கடந்து போக முடியாது - செல்வப்பெருந்தகை
x

கள்ளக்குறிச்சி விவகாரத்தை யாரும் கடந்து போக முடியாது என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை,

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கள்ளக்குறிச்சி விவகாரத்தை யாரும் கடந்து போக முடியாது. யாராலும் இதை நியாயப்படுத்த முடியாது. தவறு தவறுதான். இப்படிப்பட்ட நிகழ்வுகள் கிராமங்களில் நடப்பதை எண்ணி தலைகுனிந்துதான் நிற்கிறோம். அதற்காக முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 2001-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில் கள்ளச்சாராயத்தால் 52 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் பார்வையை இழந்துள்ளனர். அதே ஆண்டில் கொரட்டுர், அம்பத்தூர் பகுதிகளிலும் உயிரிழப்புகள் நடந்துள்ளன. அப்போது ஜெயலலிதாவை ராஜினாமா செய்யக்கோரி யாராவது கேட்டார்களா? அல்லது அவர்தான் ராஜினாமா செய்துவிட்டாரா? மிகப்பெரிய இழப்பு நமக்கு ஏற்பட்டுள்ளது. இதை அரசியல் ஆக்க வேண்டாம். விசாரணை அறிக்கை வந்த பிறகு இதைப் பற்றி விரிவாக விவாதிக்கலாம்."

இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.



Next Story