ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்
ஜெயலலிதாவை அதிமுகவினர் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை,
சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர். ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. கரசேவையை காரணம் காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்டபோது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா. கோவில்களில் குடமுழுக்கு, கரசேவகர்களுக்குப் பாராட்டு, ராமர் கோவில் வேண்டும் என கையெழுத்து வாங்கி அனுப்பியவர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம். ஜெயலலிதாவை அதிமுகவினர் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோவில் சென்றிருப்பார். பல ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் ஜெயலலிதா. நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்பவர் ஜெயலலிதா.
இங்கே மதவாதம் இல்லை; மனித வாதம் மட்டுமே உள்ளது. தொண்டர்களுக்கு மரியாதை உள்ள கட்சி பாஜக அதனால்தான் துணிந்து கவர்னர் பதவியை விட்டு துறந்தேன். காவி நிறத்தில் இருந்து திருவள்ளுவரை வெண்மையாக்கினார்கள், இப்போது நாங்கள் மீண்டும் காவி நிறத்திற்கு மாற்றினோம்.
பாஜகவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோம். இந்தியா கூட்டணி தோல்வி பயத்தில் உள்ளது. மிகப்பெரிய வெற்றி பெற்று ஜூன் 4-ம் தேதி வலுவான அரசாக பாஜக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.