புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை: 2 அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு பயனில்லை- செல்லூர் ராஜூ பேட்டி


புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை: 2 அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு பயனில்லை- செல்லூர் ராஜூ பேட்டி
x

மதுரைக்கு எந்த புதிய திட்டமும் வரவில்லை. எனவே 2 அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு பயனில்லை என்று செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை


வரவேற்பு

பசும்பொன்னில் வருகிற 30-ந் தேதி நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில், அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அதற்காக அவர் மதுரைக்கு வருகை தர உள்ளார். எனவே அவருக்கு இங்கு வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், மதுரை மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையில் மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாடு வரலாற்று வெற்றியை பெற்றது. பசும்பொன் தேவர் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவர் அன்றைய தினம் தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதனைத்தொடர்ந்து பசும்பொன் சென்று தேவர் குருபூஜையில் கலந்து கொள்கிறார்.

குடிநீர் திட்டம்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரத்தை மேம்படுத்தினோம். குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.1,294 கோடியில் முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தோம். நகரின் விரிவாக்க பகுதிகளில் ரூ.600 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்தினோம். ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்தோம். மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் ரூ.600 கோடி செலவில் பல்வேறு வசதிகளை செய்தோம். நத்தம் நான்கு வழிச்சாலை, வைகை கரை சாலைகளை அமைத்தோம்.

தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகி விட்டது. மதுரையில் கலைஞர் நூலகம் தவிர எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் என 2 பேர் இருந்தும் மதுரை மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வில்லை. அவர்களால் மதுரைக்கு பயனில்லாமல் உள்ளது. கடந்த ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்ட கோரிப்பாளையம் மேம்பாலம், ஆவின் மேம்பாலம் ஆகிய பணிகளை கூட அவர்கள் இன்னும் தொடங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மருது பாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மதுரை மீனாட்சி பஜாரில் உள்ள அவர்களது சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story