மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இனிமேல் காலநீட்டிப்பு கிடையாது-அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திட்டவட்டம்


மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இனிமேல் காலநீட்டிப்பு கிடையாது-அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திட்டவட்டம்
x
தினத்தந்தி 1 March 2023 12:24 AM IST (Updated: 1 March 2023 3:38 PM IST)
t-max-icont-min-icon

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணிகள் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இனிமேல் காலநீட்டிப்பு கிடையாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கரூர்

கால அவகாசம் கிடையாது

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கரூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பொதுமக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஏறத்தாழ 2 கோடியே 67 லட்சம் மின்நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய நிலையில், நேற்றுமுன்தினம் இரவு நிறைவு பெற்றவரை 1½ லட்சம் பேர் தான் இணைக்காமல் உள்ளனர். மற்றவர்கள் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர். இன்று (நேற்று) மாலையோடு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடிய பணிகள் நிறைவு பெற்றது. இதற்குமேல் ஆதார் எண்ணை இணைக்க காலநீட்டிப்பு வழங்கப்படமாட்டாது.

6 ஆயிரம் மெகாவாட்

ஆன்லைன் வழியாக ஆதார் எண் இணைப்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. ஏற்கனவே சில பிரச்சினைகள் இருந்தன. அவைகள் உடனடியாக சரிசெய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டன. இதனால்தான் குறுகிய காலத்தில் இவ்வளவு பேர் இணைத்துள்ளனர். இது மிகப்பெரிய இமாலய சாதனை. சூரியமின் உற்பத்தியில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்றுமுன்தினம் அதிகபட்சமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் சூரியமின் உற்பத்தி செய்வதில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 6 ஆயிரம் மெகாவாட்டிற்கு மின்சார வாரியமே சொந்தமாக உற்பத்தி செய்வதற்கு பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. திருவாரூரில் சூரிய மின்உற்பத்தி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் அதற்கான நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story