அரசு பஸ்களில் போலீசாருக்கு இலவச பயணம் கிடையாது - போக்குவரத்து துறை


அரசு பஸ்களில் போலீசாருக்கு இலவச பயணம் கிடையாது
x

வாரண்டு இருக்கும் பட்சத்தில் மட்டுமே போலீசாருக்கு பஸ்களில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது.

சென்னை,

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசு பஸ் ஒன்றில் நாங்குநேரி கோர்ட்டு முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒரு போலீஸ்காரர் ஏறி உள்ளார். அந்த போலீஸ்காரரிடம் பஸ் கண்டக்டர் டிக்கெட் கேட்ட போது, அரசு பஸ்சில் அரசு பணியில் உள்ளவர்கள் அனைவருக்குமே டிக்கெட் கிடையாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் நேற்று வைரலானது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

போலீசார் பஸ்சில் பயணிக்கும்போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்டு இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்த தொகையையும் போக்குவரத்து துறை அரசிடம் திரும்ப பெற்றுக்கொள்கிறது. எனவே, நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பஸ் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே போலீசார் டிக்கெட் பெற்று பயணம் செய்வது குறித்து 2019-ம் ஆண்டு பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடிதம் ஒன்றையும் பஸ் கண்டக்டர்கள் தங்களுக்குள் வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்து, இது போன்ற சம்பவங்களின் போது அதனை காண்பிக்குமாறு தங்களுக்குள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story