3 கிலோ வாட் வரையில் 'சோலார்' அமைக்க சாத்தியக் கூறு ஒப்புதல் தேவை இல்லை -தமிழ்நாடு மின்சார வாரியம்
நமது மாநிலத்தில் கட்டிட மேல் கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து சூரிய மின் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், விண்ணப்ப செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் மின்சார துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான சூரிய மின் உற்பத்தியை (சோலார்) மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
தற்போது, தமிழ்நாட்டில் சூரிய மின் உற்பத்தியின் நிறுவப்பட்ட திறன் 7 ஆயிரத்து 372 மெகாவாட்டாக உள்ளது. இவற்றில் 526 மெகாவாட் கட்டிட மேல் கூரையில் பொருத்தப்படும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களாக அமைக்கப்பட்டு உள்ளது.
நமது மாநிலத்தில் கட்டிட மேல் கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து சூரிய மின் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், விண்ணப்ப செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது தாழ்வழுத்த மின் இணைப்புகளில் மேல்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக செயலாக்கப்படுகின்றன.
இந்த செயல் முறையை மேலும் விரைவுபடுத்த, 3 கிலோ வாட் வரையிலான சூரிய மின் சக்தி திறன் அல்லது மின் இணைப்பில் அனுமதிக்கப்பட்ட மின் திறன் இரண்டில் எது குறைவோ, அதற்கு ''சாத்தியக்கூறு ஒப்புதல்'' பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
தங்கள் மின் இணைப்பு உள்ள கட்டிடங்களின் மேல் கூரையில் சூரிய மின் நிலையங்கள் நிறுவ விரும்பும் நுகர்வோர் விண்ணப்பத்தை இணையதளம் வாயிலாக பதிவு செய்து இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.