நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி- மாநகராட்சி ஆணையர்


நெல்லை  மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி- மாநகராட்சி ஆணையர்
x
தினத்தந்தி 12 Jan 2024 11:29 AM IST (Updated: 12 Jan 2024 11:58 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்க ஒரு கவுன்சிலர் கூட தற்போது வரை மாமன்ற கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வரவில்லை.

நெல்லை,

நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 51 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் உள்ளனர். இதில் பெரும்பாலான தி.மு.க. கவுன்சிலர்கள், மேயர் பி.எம்.சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று ஆணையாளருக்கு மனு அளித்தனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மனுவில் கையெழுத்திட்ட கவுன்சிலர்களிடம் நேரில் விளக்கம் கேட்டார். தொடர்ந்து அவரது உத்தரவுப்படி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நெல்லை மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்டப மாமன்ற கூட்டரங்கில் நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், கவுன்சிலர்கள் பலரும் குற்றாலம், கேரளா, கன்னியாகுமரி என பக்கத்து மாவட்டங்களுக்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை 11 மணி ஆன பிறகும் ஒரு கவுன்சிலர் கூட கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வரவில்லை. கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை என்றால் மேயருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதாவது 5-ல் 4 பங்கு உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தால் மட்டுமே தீர்மானம் வெற்றி பெறும்.

தற்போது வரை ஒரு கவுன்சிலர் கூட வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறுமா? இல்லையா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. 44 உறுப்பினர்கள் பங்கேற்றால் மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்பதால் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்ற ஐயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்புக்கு போதிய கவுன்சிலர்கள் வராததால் தீர்மானம் கைவிடப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டதால் நெல்லை மேயர் சரவணனின் பதவி தப்பியுள்ளது.


Next Story