கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ வழக்குப்பதிவு


கவர்னர்  மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ வழக்குப்பதிவு
x

கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை,

கடந்த மாதம் 25-ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை மீது ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றார். கவர்னர் மாளிகையின் வெளியே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அதற்குள் அவர் வீசிய பெட்ரோல் குண்டுகள் மாளிகைக்கு வெளியே விழுந்தன. மேலும், அவரிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார், கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ரவுடி கருக்கா வினோத் மீது என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது. கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.


Next Story