புதுக்கோட்டையில் என்.ஐ.ஏ. சோதனை


புதுக்கோட்டையில் என்.ஐ.ஏ. சோதனை
x

புதுக்கோட்டையில் என்.ஐ.ஏ. சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை

என்.ஐ.ஏ. சோதனை

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது. இதில் புதுக்கோட்டையில் உசிலங்குளத்தில் ரசீத் அகமது (வயது 37) வீட்டில் மதுரையை சேர்ந்த என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டில் ரசீத் அகமது இருந்தார். அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் இருந்த காகிதங்கள், புத்தகங்களை சோதனையிட்டனர். எழுதப்பட்ட துண்டு தாள்களையும் கைப்பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது.

ஆவணங்கள் பறிமுதல்

மேலும் வீட்டில் இருந்தவர்களிடமும், அவரது சகோதரரிடமும் விசாரணை நடத்தினர். இந்த சோதனையானது அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 10.45 மணி அளவில் முடிவடைந்தது. சோதனையை முடித்துக்கொண்டு வெளியே வரும் போது அதிகாரிகள் 2 பேக்குகளுடன் வந்தனர். இந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் விசாரணைக்காக மதுரையில் ஆஜராக வேண்டும் என ரசீத்அகமதுவிடம் அதிகாரிகள் சம்மன் கொடுத்ததாக போலீசார் கூறினர். ரசீத் அகமது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தில் திருச்சி மண்டல பொறுப்பாளராக பதவி வகித்து வந்துள்ளார். அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட பின் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் இருந்து வருகிறார். இந்த சோதனை குறித்து தகவல் அறிந்ததும் அவரது வீட்டிற்கு உறவினர்கள் சிலர் திரண்டு வந்தனர். சோதனையையொட்டி அவரது வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. என்.ஐ.ஏ. சோதனையால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story