தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 40 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
கோவை கார் வெடிப்பு மற்றும் மங்களூரு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம், கேரளா, கர்நாடகத்தில் 40 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கோவை,
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் சிலிண்டர் வெடித்தது.
இந்த பயங்கர சம்பவத்தில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
கார் வெடிப்பு சம்பவம்
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவரது வீட்டில் இருந்து ஐ.எஸ். இயக்க ஆதரவு தொடர்பான குறிப்புகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அவர்கள் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குக்கர் குண்டு வெடிப்பு
இதேபோல் கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி ஆட்டோவில் எடுத்துச்செல்லப்பட்ட குக்கர் குண்டு வெடித்தது. இதில் குக்கர் வெடிகுண்டை எடுத்துச்சென்ற முகமது ஷாரிக் படுகாயத்துடன் சிக்கினார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கர்நாடகாவில் அவர் மிகப்பெரிய நாசவேலையை அரங்கேற்ற திட்டமிட்டு செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த 2 சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பில் உள்ளவை என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஜமேஷா முபினும், அவரது ஆதரவாளர்களும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
என்.ஐ.ஏ. சோதனை
இந்தநிலையில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்கள் என்று பட்டியலை சேகரித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை நடத்தினார்கள்.
இதில் கோவையில் 14 இடங்களிலும், பொள்ளாச்சியில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
என்.ஐ.ஏ. சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர், அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்.
சோதனை நடைபெற்ற இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
3 பேரை பிடித்துச்சென்றனர்
கோவை போத்தனூர் ஜே.ஜே. நகரில் அக்ரம் ஜிந்தா என்பவரது வீட்டில் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சோதனை நடைபெற்றது.
இதேபோல் திருப்பூரில் பனியன் நிறுவன ஊழியர் முகமது ரிஸ்வான் (வயது 40), ஆட்டோ டிரைவர் சிக்கந்தர் பாஷா (40) ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. பின்னர் 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூரு அழைத்துச்சென்றனர்.
பொள்ளாச்சி-குன்னூர்
பொள்ளாச்சியில் சையது அப்துல்ரகுமான் (57) என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ. துணை சூப்பிரண்டு பாண்டே தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்த இவர் அரபி மொழி சொல்லி கொடுப்பதாக கூறி கடந்த 2 மாதத்திற்கு முன் ஜோதி நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இவருக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இவரது வீட்டில் இருந்து கம்ப்யூட்டர், அரபி மொழி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
மேலும் அவர் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துடன் தொடர்பில் இருந்தாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உமரிகாட்டேஜ், மற்றும் ஓட்டுப்பட்டறை பகுதிகளில் உள்ள 2 பேர் வீடுகளிலும் சோதனை நடந்தது. இருவரது செல்போன்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் வாங்கி சென்றுள்ளனர்.
ஏற்கனவே கோவை சம்பவம் தொடர்பாக இதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் உமர் பாருக் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி-திருச்சி
என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட உமர்பாரூக், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர். அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த ரபிக் என்பவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதையடுத்து கிருஷ்ணகிரியில் உள்ள ரபிக் வீட்டிலும் நேற்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அவரது செல்போனை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
இதேபோல் திருச்சி பீம நகர் பகுதியில் என்ஜினீயர் சேக் தாவூத் (34) என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காலை சோதனை நடத்தினர். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இவரும், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்து போன ஜமேஷா முபினும் சென்னையில் உள்ள அரபிக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இவரது வீட்டில் இருந்து 3 லேப்டாப், 2 செல்போன், 1 பென்டிரைவ், 3 அரபி மொழி புத்தகம் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டன.
பழனி-மயிலாடுதுறை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் ராஜா முகமது (35). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தேங்காய் குடோனில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். ஆன்லைன் மூலம் அரபி மொழி கற்று வருகிறார்.
இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி, லேப்டாப், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க், புத்தகங்கள், சிம்கார்டு, செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டம் வடகரையை சேர்ந்த முகமது பைசல் (32) என்பவர் வீட்டிலும் நேற்று சோதனை நடத்தினர். .
நாகர்கோவில்-காயல்பட்டினம்
நாகர்கோவில் இசங்கன்விளையை சேர்ந்த மெக்கானிக் காஜா முகைதீன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அவரது செல்போனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மற்றும் நெல்லை, தென்காசி திருவண்ணாமலையிலும் சோதனை நடைபெற்றது.
கேரளா-கர்நாடகம்
இதேபோல் கேரள மாநிலத்தில் எர்ணாகுளத்தில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடந்தது.
கர்நாடக மாநிலம் மைசூரிலும் சோதனை நடைபெற்றது.
சென்னையில்...
சென்னையில் 3 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை மணலி தென்றல் நகர் மற்றும் மண்ணடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் செல்போன்கள் மட்டும் கைப்பற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
40 இடங்களில் சோதனை
கோவை கார் வெடிப்பு, மங்களூரு குண்டு வெடிப்பு வழக்குகளில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பல இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது. கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் 14 இடங்கள், திருச்சியில் ஒரு இடம், நீலகிரி மாவட்டத்தில் 2 இடங்கள், நெல்லை மாவட்டத்தில் 3 இடங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு இடம், சென்னையில் 3 இடங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு இடம் உள்பட மொத்தம் 32 இடங்களில் சந்தேக நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மொத்தம் 8 இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
டிஜிட்டல் உபகரணங்கள்
நேற்று நடைபெற்ற சோதனையில் 2 வழக்குகளில் ஏராளமான டிஜிட்டல் உபகரணங்கள் மற்றும் 4 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.