நெய்வேலி: நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் 2 சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி புதிய பரவனாற்றுக்கு வாய்க்கால் வெட்டும் பணி, கரிவெட்டி கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களில் சாகுபடி செய்த பயிர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டன.
இதற்கு பா.ம.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. நிலம் கையகப்படுத்தும் பணியை கைவிடக்கோரி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச் கேட் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அதிமுக புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும் போலீசாரின் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.