எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் வெல்வோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தினத்தந்தி 13 March 2024 7:08 AM GMT (Updated: 13 March 2024 11:07 AM GMT)

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் வெல்வோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழ்நாடு அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ரூ.1274 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-

மக்களுக்கான முத்திரை திட்டங்களை சிந்தித்து உருவாக்குவதால்தான் தமிழ்நாட்டின் தொழில்வளம் உயர்கிறது. வேலைவாய்ப்பு பெருகுகிறது, பொருளாதாரம் வளர்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறுகிறது. அதை பார்த்து சிலர் பொறாமைப்பட்டு தமிழ்நாட்டு மக்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் பொய்களையும், அவதூறுகளையும் பரப்ப வாட்ஸ்-அப் யூனிவர்சிட்டி நடத்துகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் நீங்கள் தக்க பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது. நம் மண்ணை, நம் தமிழை, நம் தமிழ்நாட்டை, நம் பண்பாட்டை, நம் பெருமையை பழிப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டது.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடு, துணிவோடு வந்திருக்கிறேன். சிறப்பான 3 ஆண்டுகால ஆட்சியை வழங்கிய பெருமையோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். மக்களிடம் மகிழ்ச்சியை காணும்போது நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் வெல்வோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. அரசு விழாவா?, மண்டல மாநாடா? என எண்ணும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள. கோட்டையில் இருந்து மட்டும் திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களின் மனங்களையும் தெரிந்துகொள்கிறேன்.

மகள்களை பெற்றவர்களை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பதறவைத்தது. பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுப்பதுபோல் அ.தி.மு.க.வினர் நாடகம் ஆடினர். தங்கள் கோட்டை என மேற்கு மண்டலத்தை கூறும் அ.தி.மு.க.வினர் ஏதாவது நன்மை செய்தனரா?. கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அ.தி.மு.க. அமைச்சர், டி.ஜி.பி. ஆகியோர் இருந்தனர்.

நாட்டு மக்களுக்கு எதையுமே செய்துதராத பிரதமர், மோடியின் உத்தரவாதம் என டி.வி., செய்தித்தாள்களில் பக்கம், பக்கமாக விளம்பரம் வெளியிட்டுள்ளனர். பிரதமர் மோடி அவர்களே ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் என நீங்கள் கொடுத்த உத்தரவாதத்தின் இன்றைய நிலை என்ன? 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என உத்தரவாதம் அளித்தீர்களே அதன் நிலை என்ன?. அதை கூறுங்கள் பிரதமர் மோடி. தமிழ்நாட்டிற்கு நீங்கள் செய்துள்ள சிறப்பு திட்டங்களை பட்டியலிடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story