மாவட்ட கூடைப்பந்து, கைப்பந்து போட்டி


மாவட்ட கூடைப்பந்து, கைப்பந்து போட்டி
x

தஞ்சையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து மற்றும் கைப்பந்து போட்டியை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கிவைத்தார்.

தஞ்சாவூர்

மாவட்ட அளவிலான போட்டி

தஞ்சை மாவட்டத்தில் குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 10 இடங்களில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். அதன்படி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன.

அதன்படி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியை தஞ்சை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல், ஒருங்கிணைப்பாளர்கள் சி.ரவிச்சந்திரன், டி.ரவிச்சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் தமிழ்வாணன், கூடைப்பந்து பயிற்சியாளர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

மாநில போட்டிக்கு தகுதி

இதில் கூடைப்பந்து போட்டியில் 30 அணிகளும், கைப்பந்து போட்டியில் 30 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. மாணவிகளுக்கான போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் 30 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story