"நான் நிம்மதியாக இல்லை என் அப்பாவிடம் சென்று விடுகிறேன்": கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுப்பெண் தற்கொலை


நான் நிம்மதியாக இல்லை என் அப்பாவிடம் சென்று விடுகிறேன்: கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுப்பெண் தற்கொலை
x

வேலூர் அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த கீழ் கொத்தூர் புதுமனை காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் தமிழரசன் (வயது 26) டிரைவராக வேலை செய்து வருகின்றார்.

இவருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த மீனாட்சி (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்னால் திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணம் ஆன தம்பதிகள் வாழ்க்கையை சந்தோஷமாக கழித்துக் கொண்டிருந்த நிலையில் கணவர் தமிழரசன் ஏற்கனவே மாமன் மகளை திருமணம் செய்து கொண்டதும் அதனை மறைத்து 2-வதாக தன்னை திருமணம் செய்ததும் மீனாட்சிக்கு தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது சம்பந்தமாக கணவர் தமிழரசன் மற்றும் மாமனார்- மாமியாாிடம் கேட்டபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு இவர்களுக்குள் இது சம்பந்தமாக மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மீனாட்சி கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலை எழுந்தபோது மீனாட்சி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து கணவர் தமிழரசன் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த மீனாட்சியை மீட்டனர். தகவல் அறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் மீனாட்சி இறந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீனாட்சி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆன நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் வேலூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

அவராவது நிம்மதியாக இருக்கட்டும் -கடிதத்தில் உருக்கமான தகவல்

மீனாட்சி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ''நான் ஏற்கனவே தமிழரசனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று கூறினேன். மாமா என் பேச்சைக் கேட்காமல் என்னைஅவருடன் கல்யாணம் செய்து வைத்தீர்கள். நான் நிம்மதியாக இல்லை என் அப்பாவிடமே சென்று விடுகிறேன்.

என் கணவர் தமிழரசனை ஒன்றும் செய்து விடாதீர்கள் நான்தான் நிம்மதியாக இல்லை. அவராவது நிம்மதியாக இருக்கட்டும். நான் சாகப் போகிறேன், சாகப் போகிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.Content Area


Next Story