ஓலையூரில் புதிதாக அமையவுள்ள என்.சி.சி. பயிற்சி மையம்
ஓலையூரில் புதிதாக அமையவுள்ள என்.சி.சி. பயிற்சி மையத்தில் தேசிய மாணவர் படை துணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான்- நிக்கோபார் பகுதி தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின் துணை இயக்குனர் கமோடர் அதுல் குமார் ரஸ்தோகி திருச்சி என்.சி.சி. குழுமத்திற்கு நேற்று வருகை தந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் குரூப் கமாண்டர் கர்னல் சுனில் பட் மற்றும் வி.எஸ்.எம். தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி குழுமத்தின் பயிற்சியின் நிலை, உபகரணங்கள், ஆடை மற்றும் வாகனங்களின் நிலை, இந்த ஆண்டு நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, திருச்சி குழுமத்தின் சாதனைகள், கடந்த2 ஆண்டுகளில் அகில இந்திய என்.சி.சி. முகாம்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி குழுமத்தை சேர்ந்த மாணவர்கள், குழு வென்ற கோப்பைகள் மற்றும் பதக்கங்கள், சமூக சேவை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விளக்க காட்சி ஒளிபரப்பட்டது.
பின்னர் ஓலையூரில் உள்ள என்.சி.சி. பயிற்சிக் கூடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது என்.சி.சி. பயிற்சி கூடத்தின் நோடல் அலுவலரான திருச்சி 2 தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சியின் தலைமை அதிகாரி அருண்குமார் இந்த பயிற்சி கூடத்தின் திட்டம் குறித்து விளக்கமளித்தார். இதில் முதல் கட்டமாக என்.சி.சி. பயிற்சி மையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது. தேசிய மாணவர் படை வீரர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் என்.சி.சி. அதிகாரிகள் மற்றும் திருச்சி என்.சி.சி. குழுமத்தின் ராணுவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்புகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.