காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர்
காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மரை எம்.எல்.ஏ. க.சுந்தர் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம் மாநகராட்சி மகாத்மா காந்தி நகர் பகுதி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் குறைந்த அழுத்த மின்வினியோகம் காரணமாக வீட்டு உபயோக பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் மகாத்மா காந்தி நகர் பகுதியில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை தொடங்கி வைக்க வந்த உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தரிடம் தங்கள் பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக சிரமப்படுவதாக குறைகளை எடுத்து சொல்லி புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை கேட்ட எம்.எல்.ஏ. க.சுந்தர் 24 மணி நேரத்திற்குள்ளாக சரி செய்து கொடுப்பதாக கூறிவிட்டு சென்றார். பொதுமக்களின் குறைகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்ட எம்.எல்.ஏ. மின்வாரிய துறை அதிகாரிகளிடம் உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
எம்எல்ஏ-வின் அறிவுறுத்தலின் பேரில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட மின்வாரிய அதிகாரிகள் ரூ.5 லட்சத்தில் புதிய டிரான்ஸ்பார்மரை காந்திநகர் பகுதியில் அமைத்து கொடுத்தனர். அதனை எம்.எல்.ஏ. க.சுந்தர் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார். விழாவில் காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மண்டல குழு தலைவர்கள் சந்துரு, செவிலிமேடு மோகன், பணிக்குழு தலைவர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.