புதிதாக கடைகள் கட்டித்தர வேண்டும்


புதிதாக கடைகள் கட்டித்தர வேண்டும்
x

நாகை புதிய பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்துள்ளதாக கடைகள் இடிக்கப்பட்டதால் புதிதாக கடைகள் கட்டித்தர வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகை பகுதியை சேர்ந்த வேதவள்ளி, அமுதா, புஷ்பா ஆகியோர் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் அருண்தம்புராஜிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-நாங்கள் பரம்பரை பரம்பரையாக வேட்டையாடும் தொழிலை செய்து வந்தோம். இந்த தொழில் சட்டப்படி குற்றம் என்பதை உணர்ந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாகை புதிய பஸ் நிலையத்தில் சிறிய அளவிலான கடை வைத்து பாசி மணி, கண்ணாடி வளையல் போன்ற பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வந்தோம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எங்களது கடை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக நகராட்சி பணியாளர்கள் இடித்து விட்டனர். எங்களுக்கு எந்த முன் அறிவிப்பும் செய்யவில்லை. இவ்வாறு அறிவித்து இருந்தால் நாங்களே கடைகளை காலி செய்து இருப்போம்.முன் அறிவிப்பு இன்றி கடைகளை இடித்ததால் அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டன. இதை நம்பி தான் நாங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு புதிதாக கடை வைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story