மாமல்லபுரத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் - அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் ஆய்வு


மாமல்லபுரத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் - அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் ஆய்வு
x

மாமல்லபுரத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் ஒரே நேரத்தில் 50 பஸ்கள் நிற்க கூடிய வகையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டும், அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அங்குள்ள கருக்காத்தம்மன் கோவில் எதிரில் 6 ஏக்கர் பரப்பளவில் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் வெளிநாடுகளில் உள்ளது போல் நவீன பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எந்த மாதியான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது? வணிக வளாகங்களை எப்படி அமைப்பது? புதிய பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகளை எந்த மாதிரியான கட்டுமான பணிகளில் தொடங்குவது என்பது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு நேற்று சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோருடன் மாமல்லபுரம் வந்து புதிய நிலையம் அமைய உள்ள இடத்தில் புதிய பஸ் நிலைய மாதிரி வரைபடத்தை கொண்டு ஆய்வு செய்தார்.

அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

மாமல்லபுரத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சதுர அடியில் அமைய இருக்கின்ற இந்த புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 50 பஸ்கள் நிற்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

இந்த பஸ் நிலையத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து பணிகளையும் முழு வீச்சில் விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

கிளாம்பாக்கம், கூத்தம்பாக்கம், செங்கல்பட்டு பகுதிகளின் பஸ் நிலையங்களும், முடிச்சூர் பகுதியில் ஆம்னி பஸ்கள் நிறுத்துவதற்கான பஸ் நிலையமும் அமைப்பதற்கு உண்டான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர்-செயலர் அன்சுல்மிஸ்ரா, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் விசுவநாதன், மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன்குமார், கெஜலட்சுமி கண்ணதாசன், பி.எஸ்.பூபதி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.


Next Story