செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தில் ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலையம் - அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆய்வு


செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தில் ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலையம் - அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆய்வு
x

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தில் ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கம் ஊராட்சியில் 14 ஏக்கர் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. இந்த பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) மேற்கொள்ள உள்ளது.

இந்த நிலையில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சி.எம்.டி.ஏ. தலைவருமான சேகர்பாபு ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே இருக்கின்ற பழைய பஸ் நிலையத்தில் அதிகமான போக்குவரத்து நெரிசல் காரணமாக, புதிதாக பஸ் நிலையம் வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்த புதிய பஸ் நிலையம் அமைய உள்ளது. தற்போது இந்த இடத்தை சி.எம்.டி.ஏ.வும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த பஸ் நிலையம் சுமார் 46 பஸ்கள் நிற்கும் வகையில் அமையும். அதேபோன்று 69 பணிமனைகளும் அமைக்கப்பட இருக்கின்றன. 67 நான்கு சக்கர வாகனங்கள், 782 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், 30 கடைகளும் அமைய உள்ளது. இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டால், பஸ்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில், காஞ்சீபுரம் எம்.பி.செல்வம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், ஆலப்பாக்கம் வனக்குழு தலைவர் வி.ஜி.திருமலை, சி.எம்.டி.ஏ. தலைமை திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story