காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
சென்னை,
காவல்துறை சார்பில் 56 கோடியே 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 169 காவலர் குடியிருப்புகள், ராமநாதபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக வளாகத்தில் ஒருங்கிணைந்த இணையதள குற்ற ஆய்வக வளாகம் உள்ளிட்ட 2 காவல் துறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும் அவர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் 18 கோடியே 78 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 10 குடியிருப்புகள், சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக் கட்டடங்களையும், தடய அறிவியல் துறை சார்பில் 3 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ள தடய அறிவியல் மரபணு ஆய்வகப் பிரிவுக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.