சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.10½ கோடி மதிப்பில் புதிய கட்டிடம்


சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.10½ கோடி மதிப்பில் புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விரைவில் ரூ.10½ கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை


சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விரைவில் ரூ.10½ கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

புதிய கட்டிடம்

சிவகங்கை மாவட்ட, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், மாவட்ட சுகாதார பேரவை நிகழ்ச்சி, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பல்வேறு மருத்துவம் சார்ந்த நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தின் மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாதந்தோறும் 400-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, அவ்வளாகத்தில் ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைப்பதற்காக விரைவில் அடிக்கல் நாட்டும் விழாவும் நடைபெற உள்ளது.

கட்டுமான பணிகள்

மாவட்டத்தில் நாட்டரசன்கோட்டை, சங்கராபுரம், வேலங்குடி ஆகிய பகுதிகளில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முதற்கட்டமாக சங்கராபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு தற்போது ஆணை வரப்பெற்றுள்ளது. இதுதவிர, தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம் மூலம் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய நகராட்சி பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட 3 நகராட்சிகளிலும் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சுகாதாரம் மற்றும் நல மையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதுதவிர, மானாமதுரை நகராட்சிப் பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. சுகாதார கட்டமைப்பில் வட்டார அளவில் தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ ஆய்வகங்கள் அமைப்பதற்கான பிரான்மலை, முத்தனேந்தல் ஆகியப்பகுதிகளில் அதற்கான கட்டிடங்கள் அமைக்கப்படவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேரவை குழு

15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் மானாமதுரை, ஆவரங்காடு பகுதியில் புதிய துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. மக்களின் தேவை அறிந்து அவைகளை நிறைவு செய்வதற்கு மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் "சுகாதாரப் பேரவை" குழு அமைக்கப்பட்டு, இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை முதல்வர் ரேவதி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) தர்மர், துணை இயக்குனர்கள் விஜய்சந்திரன் (சுகாதாரப்பணிகள்), யோகவதி (குடும்ப நலம்), கவிதாராணி (தொழு நோய்), ராஜசேகரன் (காச நோய்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story