தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x

தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 118 ஆண்டுகளை கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில், செயல்படும் அனைத்து தலைமைக் கூட்டுறவு வங்கிகளில், தொடங்கியது முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருவது இந்த வங்கியாகும். சென்னையில் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை அளித்து வரும் இந்த வங்கி தற்போது 47 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கி, 2022-23-ம் நிதியாண்டில், ரூ.31 ஆயிரத்து 484 கோடி அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டு, ரூ.114.78 கோடி நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இவ்வங்கியின் முதலீடுகள் ரூ.4,615 கோடியாகவும், வாடிக்கையாளர்களின் வைப்பீடுகள் ரூ.12 ஆயிரத்து 486 கோடியாகவும் உள்ளது. இவ்வங்கியில் தமிழ்நாடு அரசின்பங்கு மூலதனம் ரூ.20.26 கோடியாகும்.

தானியங்கி சேவைகள்

வணிக வங்கிகளுக்கு நிகராக, வங்கியின் அனைத்துச் சேவைகளும் கணினி வழியில் மட்டுமே நடைபெறுகிறது. மேலும், துரிதப் பணப்பரிமாற்றச் சேவைகளான ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எப்.டி., ஐ.எம்.பி.எஸ்., யு.பி.ஐ., இணையவழி வங்கிச் சேவை, கைபேசி வழிச்சேவை, தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரங்கள் என அனைத்து கணினிவழி வசதிகளையும் இவ்வங்கி கொண்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் எல்லைகள் விரிவடைந்ததைத் தொடர்ந்து, விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்த இவ்வங்கியின் கிளைகள், கூட்டுறவுத் துறையின் 2023-24-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 4 புதிய வங்கிக் கிளைகளை சென்ன தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ஜெகநாதன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் அந்தோணிசாமி ஜான் பீட்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story