ரெயில் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க புதிய செயலி; அதிகாரிகள் விழிப்புணர்வு


ரெயில் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க புதிய செயலி; அதிகாரிகள் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 18 Oct 2023 3:00 AM IST (Updated: 18 Oct 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

கவுண்ட்டர்களில் வரிசையில் நிற்காமல் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை புதிய யூ.டி.எஸ். செயலி மூலம் எடுக்கலாம் என்று திண்டுக்கல்லில் ரெயில் பயணிகளுக்கு, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திண்டுக்கல்

கவுண்ட்டர்களில் வரிசையில் நிற்காமல் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை புதிய யூ.டி.எஸ். செயலி மூலம் எடுக்கலாம் என்று திண்டுக்கல்லில் ரெயில் பயணிகளுக்கு, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்பதிவு இல்லாத டிக்கெட்

நாடு முழுவதும் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப ரெயில்கள், ரெயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் ரெயில் பயணிகளுக்காக ஆன்லைன் சேவைகளும் வழங்கப்படுகின்றன. அதன்படி, ரெயில் பயணிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட்டுகளை எடுத்து கொள்ள முடிகிறது.

இதுதவிர முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட் ஆகியவற்றை ரெயில் நிலையங்களில் இருக்கும் தானியங்கி எந்திரங்களில் எடுத்து கொள்ளும் வசதியும் உள்ளது. எனினும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதற்கு அனைத்து ரெயில் நிலையங்களிலும் கவுண்ட்டர்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் ரெயில் நிலையத்துக்கு வருவோர் டிக்கெட் எடுக்க சிரமப்படும் நிலை உள்ளது.

யூ.டி.எஸ். செயலி

இதை தவிர்க்கும் வகையில் இந்திய ரெயில்வே நவீன வசதிகளுடன் கூடிய யூ.டி.எஸ். எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை அனைவரும் தங்களுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் முன்பதிவு இல்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் ஆகியவற்றை எடுத்து கொள்ளும் வசதி உள்ளது.

இதுகுறித்து ரெயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. அப்போது ரெயில் பயணிகளின் செல்போனில் யூ.டி.எஸ். செயலியை பதிவிறக்கம் செய்து, முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பது குறித்து அதிகாரிகள் விளக்கினர். இதனை பயணிகள் ஆர்வமுடன் கேட்டனர்.

50 மீட்டருக்கு வெளியே...

இதுகுறித்து கோட்ட வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி கூறுகையில், "யூ.டி.எஸ். செயலி மூலம் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எளிதாக எடுக்கலாம். ஆனால் ரெயில் நிலையம், ரெயிலுக்குள் இருக்கும் போது டிக்கெட் எடுக்க முடியாது. இதன்மூலம் முறைகேடுகள் தடுக்கப்படுகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து 50 மீட்டருக்கு வெளியே நின்று முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுக்கலாம். இது தொடர்பான பதாகைகள், ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அதை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்" என்றார்.


Next Story