சோதனை ஓட்டம் திருப்தி: போக்குவரத்துக்கு தயார் நிலையில் நெல்லை-திருச்செந்தூர் ரெயில் பாதை
மழையால் பாதிப்பு ஏற்பட்ட ரெயில் பாதையில் முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.
நெல்லை:
திருச்செந்தூர்-நெல்லை இடையே அமைந்துள்ள ரெயில் பாதை, கடந்த டிசம்பர் மாதம் 17-ந்தேதி பெய்த பலத்த மழையால் சேதம் அடைந்தது. ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதிகளில் மழை வெள்ளம் தண்டவாளத்தை சேதப்படுத்தி வயல் பகுதிக்குள் தூக்கி வீசியது. தண்டவாளத்தின் அடிப்பகுதியில் இருந்த ஜல்லி கற்கள் மற்றும் மண் அரித்துச்செல்லப்பட்டு, அப்பகுதி கால்வாய் போன்று மாறியது.
அன்றைய தினம் அந்த தண்டவாளத்தில் இயக்கப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் பாதுகாக்கப்பட்டனர்.
அதன்பின்னர் முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை நெல்லைக்கு கொண்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி -நாசரேத் இடையே சேதம் அடைந்த தண்டவாள பகுதி சீரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அங்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.
தொடர்ந்து மின்சார வழித்தடமும் சீரமைக்கப்பட்டது. நேற்று மதியம் மதுரை ரெயில்வே ஆய்வு குழுவினர் நெல்லைக்கு வந்தனர். அவர்கள் பிற்பகல் 1.30 மணி அளவில் நெல்லையில் இருந்து மின்சார ரெயில் என்ஜின் மூலம் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு சென்றனர். செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் புதிதாக சீரமைக்கப்பட்ட தண்டவாளம் மற்றும் மின்சார பாதை சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து என்ஜினீயர்கள் குழு, பாதுகாப்பு அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) நெல்லைக்கு வருகிறார்கள். அவர்கள் மின்சார ரெயில் என்ஜின் மூலம் நெல்லை -திருச்செந்தூர் இடையே பயணித்து ஆய்வு செய்கிறார்கள்.
ரெயில் பாதை போக்குவரத்துக்கு தயார் என்பது உறுதி செய்யப்பட்டவுடன், இன்று மாலையே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.