தக்கலை அருகேஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
தக்கலை அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
தக்கலை,
தக்கலையில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் சரல்விளை அருகே கோதநல்லூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 2.47 ஹெக்டேர் பரப்பளப்பில் பூமுகத்துகுளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து ரப்பர், வாழை மரங்களை நட்டு வளர்த்து வந்தனர். எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கவுன்சிலர் மஞ்சு தலைமையில் பொதுமக்கள் கோதநல்லூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து இந்த பிரச்சினை குறித்து பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தக்கலை பொதுப்பணித்துறை நீர் ஆதாரப்பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் குளத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானது.
இதையடுத்து பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் அய்யப்பன் பிள்ளை, கல்குளம் நில அளவையர், ஊழியர்கள் குளத்திற்கு வந்து ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அளவு செய்து சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை மீட்டு சுற்றி எல்கை கல் நட்டனர். அத்துடன் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்திருந்த ரப்பர் மரங்கள், வாழை போன்றவற்றிற்கு நம்பர் போட்டு அடையாளப்படுத்தினர். நிகழ்ச்சியில் கவுன்சிலர் மஞ்சு, தே.மு.தி.க. பேரூர் செயலாளர் விஜயகுமார் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.