மொடக்குறிச்சி அருகே பள்ளிக்கூடம் சென்று வர பஸ் வசதி கலெக்டரிடம் மாணவ-மாணவிகள் மனு


மொடக்குறிச்சி அருகே பள்ளிக்கூடம் சென்று வர பஸ் வசதி கலெக்டரிடம் மாணவ-மாணவிகள் மனு
x

மொடக்குறிச்சி அருகே உரிய நேரத்தில் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவர பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று மாணவ- மாணவிகள் கலெக்டரிடம் மனு அளித்தனா்.

ஈரோடு

மொடக்குறிச்சி அருகே உரிய நேரத்தில் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவர பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று மாணவ- மாணவிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பஸ் வசதி

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். மொடக்குறிச்சி அருகே உள்ள அட்டவணை அனுமன்பள்ளி பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மொடக்குறிச்சி அருகே முகாசிஅனுமன் பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு அண்ணா நகர், வேமாண்டம்பாளையம், வெள்ளிவலசு, அட்டவணை அனுமன்பள்ளி, காமராஜர்புரம், ஊஞ்சபாளையம், பழையபாளையம், முருங்கத்தொழுவு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறோம். நாங்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்காக காலை 7 மணிக்கும், பள்ளியில் இருந்து வீடு திரும்புவதற்காக மாலை 5 மணிக்கும் சென்னிமலையில் இருந்து எழுமாத்தூர் செல்லும் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த பஸ் உரிய நேரத்துக்கு வருவது இல்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே பள்ளிக்கூடத்துக்கு உரிய நேரத்தில் சென்று வர பஸ் வசதி ஏற்படுத்தி தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

ஆக்கிரமிப்புகள்

வில்லரசம்பட்டி அருகே உள்ள கருவில்பாறை வலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று குறிப்பிட்டிருந்தனர்.

கொடுமுடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'கொடுமுடி தாலுகா ஊஞ்சலூர் மாடப்பசாமி கோவில் அருகே, அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் அங்கு சாமியை வழிபாடு செய்ய முடியாதபடி நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாமியை வழிபாடு ெசய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றனர்.

கோபி அருகே உள்ள புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் கொடுத்த மனுவில், 'எங்கள் ஊராட்சியில் வடிகால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. புதிதாக போடப்பட்ட சாலைகள் வடிகால் வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என கூறியிருந்தனர்.

மாணவ- மாணவிகளுக்கு பரிசு

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அம்பேத்கா் மற்றும் கலைஞர் நூற்றாண்டையொட்டி நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற 18 மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 285 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story