கண்டமனூர் அருகேமூலவைகை ஆற்றில் மணல் அள்ளும் மர்ம கும்பல்
கண்டனூர் அருகே மூலவைகை ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடு்த்தனர்.
வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்யவில்லை. இதனால் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்கள் வழியாக செல்லும் மூலவைகை ஆறு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீர்வரத்து இல்லாமல் மணல் மேடாக காட்சி அளிக்கிறது. இதை பயன்படுத்தி கண்டமனூர் அருகே துரைச்சாமிபுரம், ஆத்தங்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் மாட்டு வண்டிகள் மூலம் ஆற்றில் மணல் அள்ளி வருகின்றனர்.
இந்த பகுதியில் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி மேற்கொள்வதில்லை. அதன் காரணமாக ஆற்றில் மணல் திருட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் ஆற்றின் வழியாக தோட்டங்களுக்கு செல்லும் பாதைகளில் மணல் அள்ளப்படுவதால் பள்ளம் ஏற்பட்டு விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மண் அள்ளுவதை தடுக்க ஆத்தங்கரைப்பட்டி, துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.