கடமலைக்குண்டு அருகேபாசி படர்ந்த தரைப்பாலத்தால் விபத்து அபாயம்


கடமலைக்குண்டு அருகேபாசி படர்ந்த தரைப்பாலத்தால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே பாசி படர்ந்த தரைப்பாலத்தால் விபத்து அபாயம் உள்ளது. எனவே புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

கடமலைக்குண்டு அருகே உள்ள பின்னத்தேவன்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சோலைத்தேவன்பட்டியில் இருந்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் இடையே அருகவெளி ஓடையில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்துவரும் மழையினால் அருகவெளி ஓடையில் தொடர்ந்து தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. 3 மாதங்களுக்கும் மேலாக தரைப்பாலத்தில் தண்ணீர் ஓடியதால், பாலத்தின் மேற்பரப்பில் அதிகமான பாசி படர்ந்துள்ளது.

இதனால் இந்த பாலத்தில் வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் தொடர்ந்து வழுக்கி விழுந்து வருகின்றனர். மேலும் பின்னத்தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் இந்த பாலத்தில் வழுக்கி விழுந்து காயமடைந்து உள்ளனர். மேலும் தரைப்பாலத்தை கடக்க முயன்ற டிராக்டர் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். விபத்துக்கள் தொடர்ந்ததால் கிராம பொதுமக்கள் பாலத்தின் ஒருபகுதியை கற்களால் அடைத்துவிட்டு மற்றொரு பகுதியில் பாசிகளை அப்புறப்படுத்தி சென்று வருகின்றனர்.

ஆனால் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் பாலத்தின் மேற்பகுதியில் மீண்டும் மீண்டும் பாசி உருவாகி வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க தரைப்பாலத்திற்கு பதிலாக பெரிய பாலம் கட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Related Tags :
Next Story