எட்டயபுரம் அருகே 2 கார்கள், மொபட், லாரி அடுத்தடுத்து மோதல்; தொழிலாளி பலி
எட்டயபுரம் அருகே 2 கார்கள், மொபட், லாரி அடுத்தடுத்து மோதிக்கொண்ட சங்கிலி தொடர் விபத்தில் தொழிலாளி பலியானார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே 2 கார்கள், மொபட், லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி பலியானார். மேலும் பலத்த காயமடைந்த வாலிபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொழிலாளி
எட்டயபுரம் அருகே உள்ள மேல ஈரால் தெற்கு தெருவை சேர்ந்த வீரய்யா மகன் முருகன் (வயது 60). கூலி தொழிலாளி. இவர் கோவில்பட்டியில் வேலை முடிந்து மொபட்டில் கீழ ஈரால் வழியாக மேல ஈராலுக்கு ெசன்று கொண்டிருந்தார் அவருக்குப் பின்னால் விளாத்திகுளம் தாலுகா குமாரசித்தன்பட்டியை சேர்ந்த சரவணகுமார் மகன் ஈஸ்வர் பிரகாஷ் (26) என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.
சங்கிலி தொடர் விபத்து
மேலஈரால் அருகே திடீரென்று முன்னாள் சென்று கொண்டிருந்த மொபட் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மொபட் சாலையில் தாறுமாறாக ஓடி, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியது. இந்த வேகத்தில் அந்த கார் சற்று தொலைவில் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மோதியது.
தொழிலாளி சாவு
இந்த சங்கிலி தொடர் விபத்தில் ெமாபட்டில் இருந்த முருகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஈஸ்வர் பிரகாசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரையும் போலீசார் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.