மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நவராத்திரி பெருவிழா


மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நவராத்திரி பெருவிழா
x

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நவராத்திரி பெருவிழாவை துர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சென்னை

நவராத்திரி விழா

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது. அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து, கொலுவை பார்வையிட்டதோடு, சகலகலாவல்லி மாலை பூஜையில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.

இசை நிகழ்ச்சி

நிறைவாக, மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ. மயிலை த.வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நவராத்திரி விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

வடபழனி

இதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் நேற்று நவராத்திரி விழா கொலுவுடன் தொடங்கியது. 'சக்தி கொலு' எனும் பெயரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொலுவை உபயதாரர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

நவராத்திரி விழா 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி, அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. கொலுவை பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்வையிடலாம்.

நவராத்திரியின் நிறைவு நாளான 24-ந் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.


Next Story