தேசிய அளவிலான ஜூடோ போட்டி: தமிழக அணிக்கு 52 வீரர்-வீராங்கனைகள் தேர்வு


தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கான தமிழக அணிக்கு 52 வீரர்-வீராங்கனைகள் தேர்வு பெரம்பலூரில் நடந்தது.

பெரம்பலூர்

தேசிய அளவிலான ஜூடோ போட்டி

2023-24-ம் ஆண்டிற்கான இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு தமிழக அணிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த 2 நாட்கள் நடந்தது. பெரம்பலூர் உப்போடையில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஜூடோ போட்டியை பள்ளி தாளாளர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

நேற்று முன்தினம் மாணவிகளுக்கும், நேற்று மாணவர்களுக்கும் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 276 மாணவிகளும், 396 மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஜூடோ தேர்வு போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

52 பேர் தேர்வு

14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட மாணவிகளுக்கு 25 வகையான எடை பிரிவுகளிலும், மாணவர்களுக்கு 27 வகையான எடை பிரிவுகளிலும் ஜூடோ போட்டி நடைபெற்றது. போட்டியில் முதலிடம் பெற்ற 25 வீராங்கனைகளும், 27 வீரர்களும் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் விளையாட தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன், பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story