சென்னை எண்ணூரில் எண்ணெய் அகற்றும் பணிகளை விரைவுபடுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


சென்னை எண்ணூரில் எண்ணெய் அகற்றும் பணிகளை விரைவுபடுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x

எண்ணெய் படலத்தை அகற்றுவதற்கு எடுத்த நடவடிக்கைகள் திருப்தியை தரவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மிக்ஜம் புயல் மழையின்போது சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் கலந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. இது குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, எண்ணெய் கசிவு தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் எண்ணெய் கசிவுக்கு சி.பி.சி.எல். நிறுவனமே காரணம் எனவும், அதிக அளவில் எண்ணெய் இருப்பு வைத்திருந்ததால் கசிவு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. சுமார் 11 கி.மீ. அளவுக்கு எண்ணெய் பரவியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளதா என தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், இது மனித தவறுகளால் ஏற்பட்ட பேரிடர் என்பதால் சி.பி.சி.எல். நிறுவனம்தான் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், எண்ணெய் படலத்தை அகற்றுவதற்கு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தியை தரவில்லை என்றும், எண்ணூரில் எண்ணெய் அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.




Next Story