கடைகள், வணிக வளாகங்களில் பெயர்ப்பலகைகள் தமிழில் இடம் பெற வேண்டும் கடலூரில் ஜி.கே.மணி எம்எல்ஏ பேட்டி
கடைகள், வணிக வளாகங்களில் பெயர்ப்பலகைகள் தமிழில் இடம் பெற வேண்டும்என்று கடலூரில் ஜி.கே.மணி எம்எல்ஏ கூறினார்.
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகின் மூத்த மொழியாக, தாய்மொழியாக இருக்கிற அன்னைத்தமிழை வளர்த்தெடுக்க வேண்டும், காக்கப்பட வேண்டும் என்ற சீரிய முயற்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை முதல் மதுரை வரை விழிப்புணர்வு பரப்புரை நடத்தினார்.
இந்த பரப்புரை நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் வைத்த வேண்டுகோள், பொதுமக்களும், அரசும் சிலவற்றை கடைபிடித்து அன்னைத்தமிழை வளர்த்தெடுக்க வேண்டும். அதன் ஒரு நிகழ்வாக தமிழ்நாட்டில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் உள்ள பெயர்ப்பலகைகள், விளம்பர பலகைகள் தனித்தமிழில் எழுதப்பட வேண்டும்.
அரசாணையில் குறிப்பிட்டவாறு, பெயர்ப்பலகை, விளம்பர பலகைகள் இருந்தால், 10-ல், 5 மடங்கு தமிழிலும், 3 மடங்கு ஆங்கிலத்திலும், மீதியுள்ள 2 மடங்கு அவர்கள் விரும்புகிற மொழியில் இருக்கலாம். இதை நடைமுறைபடுத்த வேண்டும். இதன்படி கடலூரில் வணிக நிறுவனத்திற்கு பெயர்ப்பலகை தமிழில் வைக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும். இதை வணிக சங்கங்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.