குளச்சல் மீனவர்கள் வலையில் சிக்கிய கிளி, நாக்கண்டம் மீன்கள்
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் கிளி, நாக்கண்டம் மீன்கள் அதிகமாக சிக்கின. அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர்.
குளச்சல்:
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் கிளி, நாக்கண்டம் மீன்கள் அதிகமாக சிக்கின. அந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர்.
குளச்சல் மீனவர்கள்
குளச்சலை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும் 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களிலும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து கரை திரும்புவது வழக்கம். ஏனெனில் ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன், கேரை, சுறா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் கடல் பகுதியில் கணவாய், கிளி மீன்கள், நாக்கண்டம் மீன்கள் கிடைத்து வருகின்றன.
நாக்கண்டம் மீன்கள்
குளச்சல் பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்று காலை வானம் மேக மூட்டமாக இருந்தது. ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 42 படகுகள் நேற்று கரை திரும்பின.
அவற்றில் நாள் ஒன்றுக்கு 20 டோக்கன்கள் முறையில் விசைப்படகுகளில் இருந்து மீன்கள் இறக்கப்பட்டன. விசைப்படகுகளில் அதிகமாக கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் கிடைத்தன.
போட்டி போட்டு வாங்கினர்
மீனவர்கள் அவற்றை மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் ரூ.2 ஆயிரம் விலை போனது. நாக்கண்டம் ஒரு பெட்டி ரூ.3 ஆயிரத்துக்கு வியாபாரிகள் வாங்கினார்கள். தோட்டு கணவாய் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.380-ம், ஓலக்கணவாய் ரூ.240-க்கும், ஸ்குட் கணவாய் ரூ.420-க்கும், நிப்புள் கணவாய் ரூ.180-க்கும் விற்கப்பட்டது.
கிளி மீன்கள் பற்பசை தயாரிப்பதற்கும், நாக்கண்டம் மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்கும் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.இது சராசரி விலை என மீனவர்கள் தெரிவித்தனர்.