நாகை மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு


நாகை மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு
x

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டுவரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

நாகை,

சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் கடற்கொள்ளையர்களின் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், நான்கு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி ஒரு லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள், வலைகளையும் அபகரித்து சென்றுள்ளனர். கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த இரண்டு மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல, வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள், அவர்களை தாக்கி, மீன்பிடி உபகரணங்களை பறித்துச்சென்றனர்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், அடையாளம் தெரியாத 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story