மாரியம்மன் கோவில் பொங்கல் விழா


மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
x
திருப்பூர்


நத்தக்காடையூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த 6-ந் தேதி நத்தக்காடையூர், சிவக்குமார் நகரில் உள்ள முனியப்பசாமி கோவிலில் அரண்மனை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மறுநாள் பூச்சாட்டுதல், 14-ந் தேதி கோவிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 21-ந் தேதி திரளான பெண்கள், பள்ளி,கல்லூரி மாணவிகள், மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்து வழிபட்டனர். பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர்.

தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. நேற்று கோவில் வளாகம், சுற்றுப்பகுதிகளில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பறவை வடிவில் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம், சலங்கை ஆட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் நத்தக்காடையூர், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், மருதுறை ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) மறு அபிஷேக பூஜை நடத்தப்பட்டு, மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7 மணிக்கு சிறப்பு பட்டிமன்றத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story